அறிவுமதியின் சிறுகதை - பெண்ணியப்பார்வை -முனைவர் சி.முடியரசன்


அறிவுமதியின் சிறுகதை - பெண்ணியப்பார்வை 

முனைவர் சி. முடியரசன்

உதவிப் பேராசிரியர், 

கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி.


சமுதாயம் என்பது பெண்களை உள்ளடக்கியது. பெண்களில்லாத சமுதாயம் முழுமை பெறாத அமைப்பே ஆகும். பெண்கள் இல்லாத கலை, இலக்கியம் கற்பனை செய்து பார்க்க இயலாதவை. பெண்கள் இல்லாத படைப்புகள் முழுமை பெறுவதில்லை. சமுதாய அமைப்பிலும் கலை இலக்கிய வடிவங்களும் பெண்களுக்கு கனிசமான இடமுண்டு என்பதை விடப் பெரும்பங்கு பெண்களுக்கு இடம் உள்ளது. ஓவியம், சிற்பம், பண், இசை, பாடல் என எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு முதன்மையான இடமுண்டு. இவற்றில் பெண்களே படைப்புப் பொருளாக உள்ளனர். பெரும்பான்மை ஆண்கள் படைப்பாளர்களாகவும் சிறுபாண்மையினராகப் பெண்களும் உள்ளனர். இதற்கு சமுதாயக் கட்டமைப்பும் ஒரு காரணம். பெண்களின் துயரம், வலி, விருப்பங்கள் ஆகியவற்றை இப்படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. சங்க கால அவ்வையார் முதல் இன்று வரை பல படைப்பாளர்களை நாம் அறிந்துள்ளோம். இதனையே பெண் மொழி, பெண் எழுத்து என வழங்கி வருகின்றனர். பெண்களுக்கே உரிய சிக்கல்களைப் பேசுவதில் ஆண்களும் சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர். அவ்வரிசையில் முதன்மை யானவராகக் கருதப்படுபவர் பாவலர் அறிவுமதி. இவருடைய வெள்ளைத்தீ எனும் சிருகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘உயிர்விடும் மூச்சு’ என்ற சிறுகதையில் இடம் பெற்றுள்ள பெண்ணியச் சிக்கல்களையும் கட்டுடைப்பையும் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சிறுகதைக் களம்

இச்சிறுகதைக் களம் ஒருதாயின் கருவறையாக அமைக்கப்பெற்றுள்ளது. கருவில் வளரும் குழந்தை பேசுவதைக் கதை நிகழ்வாக ஆக்கியுள்ளார் கதை ஆசிரியர். கதையின் சுருக்கம் பின் வருமாறு அமைகிறது.

கருவில் வளரும் குழந்தையின் மீது முன்னர் பிறந்த பெண் குழந்தைகள் இரண்டும் மிகவும் அன்பாக இருக்கின்றனர். அவர்கள் தாயின் வயிற்றில் முத்தமிடுவது இதமளிக்கிறது. தந்தை முத்தமிடும் போது மீசை குத்துகிறது. தாய் ஏதோ சாப்பிட விருப்பத்துடன் கையில் வைத்திப்பதை அறிந்ததாகக் குழந்தை சாப்பிடச் சொல்கிறது. எனக்கு ஏதும் ஆகாது நீங்கள் சாப்பிடுங்கள் என்கிறது. அக்கா இருவரும் யார் போல இருப்பார்கள் என வினவி பின்னர் நான் உங்களை மாதிரித்தானே இருக்கேன் என்கிறது. பின்னர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும்போது ஏன் கவலையாக இருக்கிறீர்கள் நான் பெண் குழந்தையா? நான் வேண்டாமா? எனக் கவலையுடன் கேட்கிறது. அப்பாவுக்குத்தான் என் முதல் முத்தம் என்னை விட்டு விடுங்கள். நான் பிறந்து உங்கள் முகத்தைப் பார்த்து விடுகிறேன். பிறகு கள்ளிப்பாளோ? நெல்லோ? கொடுத்து விடுங்கள் நான் சாப்பிடுகிறேன் என்கிறது. தொடர்ந்து மருத்துவரிடம் பேசுகிறது குழந்தை என்னைக் கொல்லும் போது என் அம்மாவுக்கு ஏதும் வலிக்காமல் என்று கூறிய குழந்தை மெல்ல மெல்ல உயிர் விடுகிறது.

பெண்ணியம்

பெண்ணியம் என்பது பெண்களின் நலனை மையமிட்ட ஓர் அரசியல் கருத்தாக்கம். பெண்களுக்கான சமத்துவம், விடுதலை, நீதி என்பன பெண்கள் கோரும் ஓர் அரசியல் நிலைப்பாடு (விஜயலெட்சுமி, 2019: ப. 1). இக்கருத்தையே அறிவுமதியின் சிறுகதை முன்வைக்கும் அரசியலாகக் கொண்டு அமைந்துள்ளது. பெண்களின் குரலாக ஒலிக்கிறது.

பிறக்கும் குழந்தை யாரைப்போல இருக்கிறது என்கிற சமுதாயத்தின் குரலை எதிர்க்கிறது. பிறக்கும் குழந்தை அச்சு அசலாக தந்தை போலவே இருக்க வேண்டும் என்பது சமுதாய மக்களின் எதிபார்ப்பு. இதனைக் கருவில் வளரும் குழந்தை கட்டுடைக்கிறது.

அக்காங்க எப்படிம்மா இருப்பாங்க

உங்கள மாதிரியா?

அப்பா மாதிரியா?

நீங்க எப்படிம்மா இருப்பிங்க?

என்னை மாதிரிதானே (உய்ரிவிடும் மூச்சு. ப. 1)

என்று தாய் தன்னைப் போலவே இருப்பாள் எனக் கூறுகிறது குழந்தை. தந்தை வழிச் சமூகத்தை விடுத்து தாய் வழிச் சமூகத்தை முன்னிலைப் படுத்துகிறது குழந்தை.

தந்தை வழிச் சமுதாய அமைப்பில் பெண்ணுக்குக் கிடைத்துள்ள அடையாளங்கள் ஆணாதிக்க மொழியின் புனைவாகும். ஆணாதிக்கம் கற்பித்த விலங்குநிலை, விலக்குநிலை, அடிமைநிலை முதலியவற்றை நீக்கப் புதிய அர்த்தங்களில் பெண் மொழியைப் புனைய வேண்டும். (சாரதாம்பாள், ப. 24).

இங்கு ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து மாறுபட்டு முற்றிலும் பெண் மொழியாகப் பேசுகிறார் அறிவுமதி. பண்பாட்டு வரையறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற பாலியல் பகுப்பு சார்ந்த தக்கென்று ஒரு புதிய மொழியை உருவாக்கும் நோக்கில் பெண் மொழியைப் பேசியுள்ளார். ஆணாதிக்க அடையாளமான மீசையப் பின்னுக்குத்தள்ளி கடைசி வரிசையில் அமர வைக்கிறார்.

நான் வெளியே வந்ததும் மொத முத்தம்

உங்களுக்குத்தாம்மா?

ரெண்டாவது சின்ன அக்காவுக்கு….

மூனாவது பெரியக்காவுக்கு

கடைசியாத்தா…அந்தக் கம்பளிப்பூச்சி மீசைக்கு…”

என முத்தமிடும் வரிசையில் தந்தையைக் கடைசியில் வைக்கிறது குழந்தை. குழந்தை பிறக்கும் முன்னரே பெண்ணியம் பேசுவதாக அமைத்துள்ளார் அறிவுமதி.

சமுதாயத்தின் அவல நிலை

தொலைக்காட்சி என்ற ஊடகம் மனித வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் வரும் தொடர்கள் (Serial Drama) பெண்களையும் பெண்களின் கண்ணீரையும் முதன்மைப்படுத்தியே அமைகின்றன. “என்னம்மா தொலைக்காட்சியா? ஏம்மா அதப் போட்டதுமே ஒரே பொம்பளையோட அழுகைச் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது.

நீங்க எதப்போட்டாலும் அதேதான் 

அய்யோ

அய்யோ…(உயிர்விடும் மூச்சு, ப. 2)

என நொந்து கொள்கிறது குழந்தை. எந்தத் தொலைக்காட்சித் தொடரை எடுத்தாலும் கண்ணீர்க் காட்சிதான் தோன்றுகிறது.

இலக்கியப் புனைவுகளில் வரும் பெண் பாத்திரங்கள் ஒரே வகை மாதிரிகளாக (Stereo types) அமைகின்றன. தாய் என்றால் தியாகம், பாசம் தன்னலமின்மை போன்ற குணங்கள், மனைவி எனில் பணிவு, அடக்கம், பாசம் என்னும் குணங்கள் இருக்கும். ஒரே வகை மாதிரியைச் சார்ந்தவையாகப் படைக்கப்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் பெயர்கள் மாற்றப்பட்டு எல்லா இலக்கியப் பனுவல்களிலும் உலவுகின்றன (விஜயலெட்சுமி, 2019, ப. 3).

ஒரே வகை மாதிரிகளாகப் பெண் பாத்திரங்கள் படைக்கப்படுவதைக் கருவில் இருக்கும் பெண் குழந்தை சாடுகிறது. இதுவே சமுதாயத்தில் அவல நிலையாகவும் உள்ளது.

பிறப்பு சுதந்திரம் மறுப்பு

இக்கதையில் பெண் குழந்தை பிறப்பதற்காசுதந்திரம் அற்ற நிலையில் இருப்பதைப் பேசுகிறது. மருத்துவமனை சென்ற கணவன், மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதயத் துடிப்பின் ஓசையில் அவர்கள் பேசுவது குழந்தைக்குக் கேட்காவில்லாலும் அவர்களின் சண்டைக்கு மூன்றாவதாகப் பிறக்கவிருக்கும் தான் ஒரு பெண் குழந்தையே எனக் குழந்தை உணருகிறது.

“அம்மா…அப்பா சொல்றத 

ஏம்மா மறுத்துப் பேச மாட்டேங்கறீங்க

அப்பா நான் உங்களுக்கு வேண்டாமா?

அப்படி நான் என்னம்மா தப்பு செஞ்சேன்” (உயிர்விடும் மூச்சு, ப. 3)

பெண் பிறந்து வளர்ந்து அனுபவிக்கும் சிக்கலை விட பிறப்பதே ஒரு போராட்டம் என்பதை இவ்வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன. பெற்றோர், வானம், பூமி, மரம், குயில் இவற்றைப் பார்த்த பிறகு என்னைக் கொல்லுங்கள் என்ற குழந்தையின் கடைசி விண்ணபம் கூட நிராகரிக்கப்படும் சூழலை கதை படம் பிடித்துக் காட்டுகிறது.

மருத்துவமனைகளின் நிலைப்பாடு

கருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை அறிவதற்குப் பயன்படும் அல்ட்ரா சவுண்டை சிசுவின் பாலினம் அறியப்பயன்படுத்தி சிசுவாய் இருந்தால் அதைக் கருக்கலைப்பு நிகழ்த்துவதை தடுப்பதற்காக Pre-conception & Pre-Natal Diagnostic – Techniques – Act (PNDT) 1994ல் கொண்டு வரப்பட்டது. PNDT சட்டத்தின்படி கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் பாலிணப் பரிசோதனை செய்வது சட்டப்படிக் குற்றமாகும் (மு. ஜெயராஜ், 2004, ப. 2). கருக்கலைப்பு சட்டம் 1994 நடை முறையில் இருக்கும் போதே மருத்துவமனைகள் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை இக்கதை எடுத்துக்காட்டியுள்ளது. இது இந்தியா முழுமைக்கும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு ஆகும்.

கருவிகளையெல்லாம் தயார் செய்துவிட்ட மருத்துவரிடம்.  “மருத்துரய்யா என்னைக் கொல்ல நீங்க தயாராயிட்டீங்க… பரவாயில்லை…ஆனா ஒரே ஒரு வேண்டுதல் என்னைக் கொல்லும் போது எங்க அம்மாவுக்கு என் ஆச அம்மாவுக்கு என்னால எந்த ஒரு சின்ன வலியும் இல்லாம என்னக் கொன்னுடுங்கைய்யா” (உயிர்விடும் மூச்சு, ப. 3) என்று கூறுகிறது. கருவிலிருக்கும் குழந்தை பேசாது என்ற போதும் கொல்லப்படும் குழதைகளின் ஒட்டு மொத்தக் குரலாக இது அமைந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்கள் மிகச் சொற்பமே. இதுவரை தண்டிக்கப்பட்ட எந்த மருத்துவரின் அங்கீகாரமும் பறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மட்டும் 7000 பெண் சிசுக்கள் கொல்லப்படுவதாக ஐ. நா. கூறுகிறது. இந்தியாவில் மட்டும் அல்ட்ரா சவுண்ட் வந்த கடந்த 30 ஆண்டுகளில் 12 மில்லியன் சிசுக்கள் கொ ல்லப்பட்டுள்ளன. இதை மிகப்பெரிய இனப் படுகொலை என்று தானே கருத முடியும் ஜீ 20 நாடுகளில் பெண்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நாடு என்று அவப்பெயரை 2012 ல் நமது நாடு சம்பாதித்தது. சண்டிகர், டெல்லி, ஹரியானா, காஷ்மீர், சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 900 க்கும் கீழ்தான் பெண்கள் உள்ளனர். மேலும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 950 க்கும் கீழ்தான் உள்ளது (மு. ஜெயராஜ், 2014, ப. 4). இக்கூற்று மிகக்கடுமையான சட்டம் இருந்தும் பெண் சிசுக்கொலை செய்யும் மருத்துவ மனைகளின் நிலைப்பாட்டை வெளிக்கொணருகிறது. கதையில் இடம் பெறும் மருத்துவமனை போல் இந்தியாவெங்கும் நடப்பதை இக்கூற்று வெளிப்படையாக்குகிறது.

கட்டுடைப்பு

ஒரு கருத்தாக்கத்தில் அல்லது பனுவலில் உள்ள உண்மையின் முரண்களையும் அவை கூறாமல் விடும் உண்மைகளையும் வெளிக் கொண்டு வரும் அணுகுமுறை கட்டுடைத்தல் எனப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பேரகராதி இலக்கியத்திலும் தத்துவத்திலும் வாசகன் தன் அனுபவத்தின் அடிப்படையில் பகுத்து ஆய்தல் என கட்டுடைத்தலுக்குப் பொருள் கூறுகிறது. இச்சிறுகதை ஒரு நாளில் நடக்கும் நிகழ்வைக் கொண்டுள்ளது. ஆனால் குழந்தை பேசிய கருத்துக்கள் அக்குழந்தை பேசாத பல கருத்துக்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வழக்கமாகப் பிறந்தவுடன் கொல்லப்படுவதைச் சுட்டுவதோடு நின்று விடாமல் அக்குழந்தையின் நனவிலி மனம் என்ன பேசும் என்பதை இக்கதை பதிவு செய்கிறது.

பெண் குழந்தை வாழத் தகுதியற்றது. இயலாமை என்பது பெண்களுக்கான அடிப்படை குணம் எனக் கூறி பெண்ணாக்கல் முயற்சியை எடுத்துரைக்கிறது. தந்தை என்ற கதை மாந்தர் முடிவெடுக்கும் திறனைப் பெற்றுள்ளார். தாய் வேண்டுமெனக் கருதியும் கருக்கலைப்புக்கு தந்தையே உட்படுத்துகிறான். இங்கு ஆணின் அதிகாரப் பராமரிப்பு தக்க வைக்கப்படுகிறது. தாய் என்பவள் இரண்டாம் நிலைக் குடிமகளாக உள்ளாள். இந்த அதிகாரம் பல அடுக்கிலமைந்ததாக தனிமனித நிலையில், குடும்ப அமைப்பில், சமூகப் பொருளதார, அரசியல், உடலியல், உணர்வு அடிப்படையிலான அதிகாரங்களாக இருப்பதைக் கண்டறியலாம். இந்தத் தனிப்பட்ட, சமூக நிறுவனங்களில் எல்லாம் முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருப்பதில்லை (விஜயலெட்சுமி, 2019, ப. 2) இதனை இக்கதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

முடிவுகள்

அறிவுமதியின் உயிர் விடும் மூச்சு எனும் சிறுகதை குழந்தை(சிசு)களின் நனவிலி மனம் பேசுவதைப் பதிவு செய்துள்ளது.

பெண் கருக்கொலையைத் தன் எதிர்கால விருப்பத்தைக் கூறுவதன் வாயிலாகக் கடுமையாகச் சாடுகிறது.

பெண்கள் ஒரே வகை மாதிரிகளாக (Stereo types) கட்டமைக்கப்படுவதையும் அதற்குக் காரணமான சமுதாயத்தையும் தொலைக்காட்சித் தொடர் பெண்களின் வாயிலாக அடையாளப்படுத்துகிறது.

பெண் சிசுக்களின் பிறப்பு என்ற இயற்கை உரிமையைக் கருக்கலைப்பு செய்து தடை செய்வதைத் தோலுரிக்கிறது. இதற்குக் காரணம் குழந்தைக்கு உரியவர்களான பெற்றோர்களையும் மருத்துவ மனைகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது.

பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என்பதைக் கட்டமைக்கிறது.

சான்றாதாரங்கள்

வெள்ளைத்தீ அறிவுமதி, 2007, அன்னம் வெளியீடு, சென்னை.

பெண்ணிய ஆய்வு அணுகுமுறை த. விஜயலெட்சுமி, பிறழ், 2019.

பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும், முனைவர் செ. சாரதாம்பாள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.

Oxfort, ஆங்கில அகராதி. 5. மு. ஜெயராஜ், ஆனந்த விகடன், 2014.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் வட்டார மக்கள் பண்பாட்டில் வேட்டைச்சடங்குகள் - முனைவர் சி.முடியரசன்