திருப்பத்தூர் வட்டார மக்கள் பண்பாட்டில் வேட்டைச்சடங்குகள் - முனைவர் சி.முடியரசன்
திருப்பத்தூர் வட்டார மக்கள் பண்பாட்டில் வேட்டைச்சடங்குகள்
முனைவர் சி.முடியரசன்
உதவிப் பேராசிரியர்
கணேசர் கலை அறிவியல் கல்லூரி
மேலைச்சிவபுரி
ஆய்வுச் சுருக்கம்
This article is a study of two rituals, Parivettai and Pulikuttu, performed in Tirupattur taluk of Sivaganga district. These rituals are an important event in the worship tradition of folk deities. Social unity and the way of sharing food are expressed through rituals. Rituals show that every community is given an opportunity. This study also indicates that these rituals are slowly disappearing due to the development of science.
திறவுச்சொற்கள்: சடங்குகள், நாட்டுப்புற தெய்வங்கள், பாரிவேட்டை, புலிக்குத்து, வேட்டைச் சடங்கு, உணவுப்பங்கீடு.
மனிதன் கூட்டாக வாழத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை வேட்டையாடுவதில் ஆர்வம் மிக்கவனாக விளங்குகிறான். உணவுத் தேவைக்காக காடுகளில் வாழும் விலங்குகளை உடைய மனிதன் அதனையே தெய்வங்களுக்கு படையல் பொருளாகவும் அமைத்துக் கொண்டான். ஏனெனில் அந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் விருப்ப உணவாக படைக்கப்படும் விலங்கினம் இருந்திருக்கும். இவ்வாறாக நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகளில் வேட்டையாடுதல் ஒரு முதன்மை நிகழ்வாக விளங்குகிறது. இந்த ஆய்வின் மூலம், தமிழர் பண்பாட்டின் தொன்மையையும், சடங்குகள் மனித வாழ்வோடு எப்படிப் பிணைந்துள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
பாரிவேட்டை
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் வட்டத்தின் கிராமங்களில் பாரிவேட்டை எனும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது. தை மாதம் இறுதியில் காப்பு கட்டப்பட்டு மாசிமாதம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவை ஒட்டியே இப்பாரிவேட்டை என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.
மாசி மாதத்தின் முதல் இரண்டு வாரத்திற்குள் சிவன்ராத்திரி என்னும் நாளைப் பாரிவேட்டைக்குரிய நாளாக இப்பகுதி மக்கள் கணக்கில் கொள்கின்றனர். பாரிவேட்டைக்குரிய ஆயத்த வேலைகளை முதலில் செய்கின்றனர். பாரிவேட்டை அன்று இரவுப் பொழுதில் வேட்டையாடிய விலங்கினங்களைப் பங்கிட்டு உண்கின்றனர்.
வேட்டையாடும் முறை
சிவன்ராத்திரி அன்று பகல் முழுவதும் ஊரில் உள்ள வீட்டிற்கொரு ஆண் சென்று வனப்பகுதியில் வேட்டை ஆடுவர். முயல், உடும்பு, கீரிஇவற்றை தேடி அலைவர் கையில் இரண்டடி கம்பும் 5 அடி வரை உள்ள கம்பும் வைத்துத் தேடுவர். கண்ணில் தென்படும் முயல், உடும்புகளை விரட்டிச் சென்று கம்பால் அடித்துக் கொல்வர். காலையிலிருந்து மாலை வரை தேடிய முயல்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பர். இதனை சிறு பாறை மீது வைத்துப் படையலிட்டு சாமியை வேண்டிப் பங்கு பிரிப்பர். சாமியாடி, பூசாரி, கணக்கப்பிள்ளை, அம்பலம் எனப் பங்கு செய்து பின்னர், வேட்டையில் பங்குபெற்ற அனைவருக்கும் பங்கு கொடுக்கப்படும். அவற்றைப் பெற்ற மக்கள் தங்கள் வீடுகளில் சென்று சமைத்து உண்பர். இது வேட்டையாடும் முறை ஆகும். இம்முறை இவ்வட்டத்தில் பயன்படுத்தப்படும் முறை ஆகும்.
இங்குள்ள வேலங்குடி எனும் ஊரில் வேட்டையாடும் முறை மாறுபட்டு அமைந்துள்ளது. பாரிவேட்டை செல்ல ஆயத்தமாகி கருப்பண்ணசாமி தங்கள் பரிவாரங்களோடு இரவுப்பொழுதில் புறப்பட்டு வனப்பகுதிக்கு ஊர் வலமாகச் செல்கிறது. கருப்பண்ணசாமியின் தங்கை எனச் சொல்லப்படும் அங்காள பரமேஸ்வரியைச் சிங்க வாகனத்தில் வைத்துச் சுமந்து வருவர்.
வனப்பகுதியைச் சென்றதும் சாமி இறக்கி வைக்கப்படுகிறது.ஊரின் மறவரினத்தை சேர்ந்த ஒருவர், வில் அம்பு போன்று செய்த மாதிரி வில்லைச் சுமந்து வருவார். அவருக்கு முன்பாக ஒருவர் ஆட்டுக்குட்டியைச் (கருப்பு நிறத்தில் உள்ள வெள்ளாட்டை) சுமந்து செல்ல மறவர் அந்த ஆட்டுக்குட்டியை வைத்திருப்பவரை விரட்டிச் செல்கிறார். சாமியை இறக்கி வைத்து ஊர்மக்கள் ஓரிடத்தில் வட்டமாக உட்கார்ந்திருப்பர். அவர்களோடு சேர்த்து சாமியையும் மூன்று முறை வட்டமடித்துச் சுற்றுகின்றனர். பின்னர் சாமிக்கு நேரே உள்ள இருள் நிறைந்த பகுதிக்குள் சென்று விடுகின்றனர். அங்கு இருளில் நிகழ்வதை எவரும் பார்க்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். இச்சடங்கில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கையில் பிரம்புடன் இருள் நிறைந்த பகுதிக்குள் செல்வார். அங்கு கொண்டு சென்ற ஆட்டுக்குட்டியை இறக்கிவிட்டு பிரம்பால் அடித்துக் கொல்வார். இறந்த ஆட்டுக்குட்டியின் நெஞ்சைப்பிளந்து இருதயத்தை எடுப்பர். ஆட்டின் இரத்தத்தையும் பிடித்து கொண்டுச்சென்ற சோற்றுடன் கலப்பர். இதனை நான்கு திசைகளிலும் சாமியை வேண்டிப் பூசாரி இந்தா பிடி என்று வீசுவார். பின்னர் இவர்கள் மக்கள் பகுதிக்கு வருவர். இறந்த ஆட்டுக்குட்டியின் மிஞ்சிய பகுதியை (இருதயம், இரத்தம் தவிர) வண்ணார் எடுத்துக் கொள்வர்.
சடங்கை நிறைவேற்றிய பின்னர் பூசாரி முன்னிலையில் வேட்டையில் பங்கு பாத்தியமுடைய வகையறாக்களுக்குத் தென்னை ஒலையாலான ஒரு பொருளையும் திருநீறையும் பல்லயமாகக் கொடுக்கின்றனர். இதனை வேலங்குடி, மலம்பட்டியைச் சார்ந்த மறவர், கோனார், சேர்வார் இனத்தவர் பெற்றுக் கொள்ளச் சடங்கு நிறைவு பெறுகிறது. மீண்டும் சாமி ஊர்வலமாகச் சென்று தன் இருப்பிடம் சேர்கிறது.
குதிரையை வாகனமாகக் கொண்ட கருப்பண்ணசாமி உறங்காபுளிக் கருப்பர் எனப்படுகிறது. இத்தெய்வம் அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் உள்ளது. ஊர்க்காக்கும் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி வேட்டைக்குச் செல்வது வழக்கமான நிலை என்ற போதும் அத்தெய்வம் படையல் பொருளாகக் கொள்வது சைவப் பொருள்களைத்தான். அதனால்தான் ஆட்டைக் கொல்லும் நிகழ்வு இருளில் நிகழ்கிறது. பலியிட்ட ஆடு இத்தெய்வங்களின் முன் படைக்கப் படவில்லை. தென்னை ஓலையும் திருநீறும் பங்காகக் கொடுக்கப்படுகிறது.
சடங்கின் பின்புலம்
இச்சடங்கின் பின்புலத்தை நோக்கும்போது பண்டைய மக்களின் நிலை வெளிப்படுகிறது. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த முன்னோரை நினைவுபடுத்துகிறது. தமிழரின் முந்தைய சமூகம் பல இனக்குழுக்களாக இருந்தது. அவர்களின் முதன்மையான தொழில் வேட்டையாடுதல் ஆகும். வேட்டையாடித் தங்கள் உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தமையால் அவர்களை ‘வேட்டைச் சமூகம்' என்று கூறுவர். இங்கு நிகழும் பாரிவேட்டையை நுணுகி ஆராயும்போது இது வேட்டைச் சமூகத்தின் தொடர்ச்சி என்று சொல்ல வேண்டியுள்ளது.
வேட்டையாடுதலை முன்னிறுத்துவதோடு வேட்டையாடும்போது குறை எதுவும் நேரக்கூடாது விலங்குகள் நிறையக்கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் இச்சடங்கு கொண்டுள்ளது. விலங்கினங்களைப் பங்கிடும் போது பூசாரி வாயில் துணியைக் கட்டிக் கொள்வர். அவர் யாருடனும் பேசக்கூடாது என்பது விதி. ஆட்டின் இருதயம், இரத்தம் எடுக்கும் நிகழ்வை யாரும் பார்க்கக் கூடாது என்றும் விளக்கொளியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் இச்சடங்கிற்குரிய நிபந்தனைகளாகும். இவற்றைச் செய்பவர் விரதம் மேற்கொள்ள வேண்டும். அவர் தீட்டு, தீமை தரக்கூடிய செயல்பாடுகளில் பங்கெடுக்கக்கூடாது என்பது இச்சடங்கிற்குரிய கட்டுபாடுகளாகும்.
பண்டைய வேட்டைச் சமூகத்தின் எச்சமான பாரிவேட்டை அனைத்துச் சமுதாயத்தவரையும் ஒன்று சேர்க்கும் காரணியாக அமைந்துள்ளது. இச்சடங்கில் பங்கேற்காத இதர பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வழிபாட்டுரிமை பெற்றவர்களாக உள்ளனர். சாமி ஊர்வல வீதிகளைச் சுத்தம் செய்து கோலமிட்டு வரவேற்கின்றனர். சாமிக்கு மாலையிட்டு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும் இவர்கள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் பாரிவேட்டை என்னும் சடங்கு சமுதாயத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சடங்கியல் நிகழ்வாக உள்ளது.
பங்கிடுதல்
ஒரு தனிமனிதனோ ஒரு சிறு வேட்டைக் குழுவோ வேட்டைக்குச் சென்று வேட்டையாடினாலும் வேட்டையில் கிடைத்த இறைச்சி வாழிடத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். வேட்டுவப் பொருளாதாரத்தில் பகிர்ந்தளித்தல் என்பது ஒருவகையில் பார்த்தால் சேமித்து வைத்தல் என்று பொருளாகும் (பக்தவத்சல பாரதி, 2008:109).
நாட்டுப்புற வழக்காற்றில் வேட்டையாடுதல் குலமரபுச் சடங்காக உள்ள நிலையில் வேட்டையாடிய பொருட்களைப் பங்கு செய்து கொள்ளுதல் என்பது மரபாகவும் சடங்ககாகவும் உள்ளது. இச்சடங்கு முறையை கும்மி நிகழ்த்திப் பிறகு பாடப்பெறும் அம்மாப்பாடல் விளக்கிக் கூறுகின்றது.
….. …… ….
….. …… ….
ஒரு கொசுவாம் பெருங்கொசுவாம்
ஓம்பது பேத்தப் பாஞ்ச கொசுவாம்
சிக்கந்த மாலையில் செத்துக் கெடக்குண்டு
காணிப்பறையன் கண்டு வந்து சொல்லி
ஊருப் பறையன் ஓடிவந்து சொல்லி
கட்டிச் சுருட்டி காவனத்துல போட்டு
உறிச்சுக் கிறுச்சு ஒன்பது கூறு போட்டு
காவக்காருக்கு ஒரு கூறு கணக்கப்பிள்ளைக்கு ஒரு கூறு
மடையறுக்கு ஒரு கூறு தோட்டிக்கு ஒரு கூறு
அம்பலாருக்கு ஒரு கூறு
மூனான் வீட்டுக் மொட்டை எலும்பு போட்டு
நாலான் வீட்டுக்கு நறுக்கெலும்பு போட்டு
அஞ்சான் வீட்டுக்கு நெஞ்செலும்பு போட்டு
தூரத்து வீட்டுக்கு சுருளி விட்டெறிஞ்சு கிண்ணம் கெடக்காம்
காலுந் தலையும் முத்துச் சுந்தரி வாசல்ல...கல்லணை போக
(லெட்சுமி, 58: 2010)
கொசு ஒன்று ஒன்பது பேரைப் பாயும் திறனுடையது. அது சிக்கந்தர் மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்த காணிக்காவல் செய்யும் பறையன் பார்த்து வந்து சொல்ல, இச்செய்தியை ஊரிலுள்ள பறையன் கேட்டு ஊருக்குள் ஓடிவந்து சொல்கிறான். இக்கொசுவை ஊர்கூடி எடுத்து வந்து காவனத்தில் (பந்தலில்) போட்டு உரிக்கின்றனர். உரித்த இறைச்சி ஒன்பது கூறுகளாகப் பங்கீடு செய்யப்படுகிறது. முறையே காவல்காரன், கணக்குப்பிள்ளை, மடையன், தோட்டி, அம்பலகாரர் ஆகியோருக்கு ஒன்பது கூறுகளாகப் பங்கு பிரிக்கப்படுகிறது. மூன்றாம் வீட்டுக்கு எலும்புகளையும், நாலாம் வீட்டுக்கு நறுக்கிய எலும்புகளையும், அய்ந்தாம் வீட்டுக்கு நெஞ்செலும்புகளையும் கொடுக்கின்றனர். தூரத்து வீட்டுக்குக் குடலையும் கொடுக்கின்றனர். மீதியுள்ள தலை, கால்களும், பங்கீடு செய்த கிண்ணமும் முத்துச்சுந்தரியின் கோயில் வாசலில் நடக்கின்றது. இவை மழை பெய்து வெள்ளத்தில் அடித்துக் கல்லணை செல்லப்போகிறது என இப்பாடல் கூறுகிறது.
இங்கு கொசு ஒரு குறியீடாக உள்ளது. கொசுவை வெட்டி ஒன்பது கூறாகப் போடமுடியாது. மாடு, ஆடு, மான் போன்ற விலங்குகளின் குறியீட்டுப் பெயராகக் கொசு அமைந்துள்ளது. வேட்டைச் சமூகத்தின் பங்கீட்டுச் சடங்கை இப்பாடலின் வழி அறிய முடிகிறது.
பலியிடப்பட்ட விலங்குகளைத் தெய்வத்துக்குப் படைத்த பின்னரே பங்கீடு செய்வர். அதனைத் தெய்வங்கள் உண்டு மகிழும் என்ற நம்பிக்கையை இம்மக்கள் கொண்டுள்ளனர்.
இதனை,
அம்மா இருப்பாளாம் அழகாக் கரைதனிலே
அய்யனாரு இருப்பாராம் நீ இருந்த பொட்டலிலே
குட்டி நத்தம் குடிப்பாளே அம்மா
கொடப் புடுங்கி மாலை தொடுப்பாளே அம்மா
பச்ச எறச்சிய பல்லாக் கடிக்கவே
போடுங்கம்மா பொண்டுகா...
பொன்னால குலவையா…
(இருளாயி, 65. 2010)
என்ற பாடல் எடுத்துக்காட்டுகிறது.
கரைகள் அம்மன் தெய்வங்களின் இருப்பிடமாகும். அய்யனாருக்கு வெட்ட வெளியில் ஊர் எல்லையில் அமைக்கப்பட்டு இருக்கும் இடம் இருப்பிடமாகும். குட்டி நத்தம் என்பது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் குறிக்கிறது. இதனைக் குடிப்பதற்கும், குடலைப் பிடுங்கி மாலை தொடுப்பதற்கும், பச்சை இறைச்சியைப் பல்லால் கடிப்பதற்கும் பெண்களே குலவையிடுங்கள் என்று இப்பாடல் கூறுகிறது. தெய்வங்களுக்குப் படையல் செய்வதையும் படையல் பொருட்களைத் தெய்வம் வந்து உண்ண வேண்டும் என்ற மக்களின் எதிர்ப்பார்ப்பும் இங்கு புலனாகிறது.
பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியைத் தெய்வங்களுக்குப் படைத்துப் பின்னர் வழிபடுவோர் அனைவரும் கூட்டாகச் சமைத்து உண்ணுகின்றனர். அதாவது தெய்வங்களுக்கான விருந்தில் மனிதர்களும் பங்கு கொள்கிறார்கள். இத்தகைய பங்கு பெறல் மூலம் தெய்வங்களின் ஆதரவைப் பெற்று அவற்றோடு சமரசமாக வாழ எண்ணுகிறார்கள் எனக் கூறலாம். இக்குழு விருந்தில் கூட சாதி ஏற்றத்தாழ்வுகளைக் காணலாம். தெய்வங்களுக்கு பலியிடப்பட்ட விலங்குகளில் பன்றியின் இறைச்சி, பம்பை, உடுக்கு ஆகிய இசைக்கருவிகளை இசைத்து தாழ்த்தப்ட்ட மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. சுடுகாட்டில் பலியிடப்பட்ட விலங்குகளும் இவர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இவர்கள் தங்களை விட உயர்ந்த சாதியினரோடு அனுசரித்து வாழ்ந்து, அவர்களுடைய சடங்கு நிகழ்ச்சிகளில் உதவி செய்ததால் பன்றியின் இறைச்சியைப் பெறுகிறார்கள். ஆக உயர்ந்த சாதியினர் தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடப்படும் ஆடு, கோழி ஆகியவற்றின் இறைச்சியையும், தாழ்ந்த சாதியினர் தெய்வமாகக் கருதப்படும் பேச்சி போன்றவற்றிற்குரிய பலிப் பொருளான பன்றி இறைச்சியையும் ஒன்று சேர்த்து உண்ணுகின்றனர். இவ்விருந்து தெய்வங்களுக்கும், மனிதர்களுக்குமிடையே உறவைப் புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு, உயர்ந்த சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே பரம்பரையாக இருந்து வரும் ஆண்டான் அடிமை உறவைப் பாதுகாக்கவும் உதவுகிறது. (முத்தையா.இ,2010:59-60).
இச்செயல் கிராமப் பஞ்சாயத்து முறைகளில் தவிர்க்க முடியாத செயலாக இருந்த போதிலும் இவர்களுக்கு தெய்வ வழிபாடு முதன்மை நோக்கமாக இருப்பதால் இதனை விட்டொழிக்கும் மனப்பாங்கு வளரவில்லை. சடங்குகளை முதன்மையாகவும் வழிபாட்டை வாழ்வியலாகவும் கொள்ளும் இவர்களால் ஏற்றத் தாழ்வை விடமுடியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
புலிக்குத்து
எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ளது குறும்பலூர் கிராமம். இங்கு நடைபெறும் வேட்டைச் சடங்கு புலிக்குத்து என்று அழைக்கப்படுகிறது. இச்சடங்கு துப்பாக்கி கொண்டு வேட்டையாடும் நிகழ்வைக் கொண்டுள்ளது.
பங்குனி மாதத்தில் காப்புக்கட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குக் கும்மி நிகழ்த்தப்படுகிறது. இறுதி நாள் பகலில் புலிக்குத்து நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்குப் புலம் பெயர்ந்து வாழும் பலரும் அக்கிராமத்திற்கு வந்து விடுகின்றனர். ஆறுநாட்கள் கும்மியை இரவில் நிகழ்த்துகின்றனர். ஏழாம் நாள் பகலில் நிகழ்த்துகின்றனர். பின்னர் அனைவரும் குளித்துத் தூய்மையாகின்றனர். இது புலிக்குத்துச் சடங்கின் ஆயத்த நிலை ஆகும்.
சடங்கு நிகழும் முறை
ஊர்ப்பொதுக் கோயிலின் அருகே அனைவரும் ஒன்றாகக் கூடுகின்றனர். இச்சடங்கில் ஆண்கள் மட்டும் பங்கெடுக்கின்றனர். அவர்கள் ஒரு செயல் நிறைவேண்டுமென முன்னரே வேண்டி, வேண்டியதன் பயனைப் பெற்றிருப்பர். அதன் பரிகாரமாக இச்சடங்கை மேற்கொள்கின்றனர்.
வேடம் புனைதல்
இச்சடங்கில் பங்கு பெறும் அனைவரும் தங்கள் உருவம் இன்னாரெனத் தெரியாத அளவுக்கு வேடம் புனைந்திருப்பர். பரமசிவன், பார்வதி, முற்றிலும் கரிபூசிய உடம்பு, பெண்வேடம், புரோகிதர், புலிவேடம், காவல்துறை அதிகாரி, மருத்துவர், தாதிப்பெண்(நர்ஸ்), பிச்சைக்காரர், மனநிலை பாதிக்கப்பட்டவர், சாமியார் எனப் பல வேடங்களைப் புனைகின்றனர். இவ்வாறு வேடம் புனைந்தவர்கள் கோயிலில் சாமியை வழிபட்ட பின்னர் ஊர்வலமாக வயல் நிறைந்த பகுதிக்குச் செல்கின்றனர்.
வேடம் புனைந்தவர்களின் செயல்பாடுகள்
பெண்வேடம் அணிந்தவர்கள் அவர்களின் கேலி முறை உள்ளவர்களோடு வந்து ஆடுவர். குத்தாட்டம் போடுவர். அதேபோல் குறவன்-குறத்திவேடம் அணிந்தவர்களும் இணைந்து ஆடுவர். சாமியார் வேடம் அணிந்தவர் அவரது முறைப்பெண்களை அழைத்து திருநீறு கொடுப்பர். வாங்க மறுத்தால் பூசிவிடுவர். காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற வற்புறுத்துவார். உடம்பில் கரி பூசியிருக்கும் ஒருவர் கூட்டம் அதிகமான பகுதியில் எவரும் கவனிக்காதபோது புகுந்து செல்வர். பிச்சை எடுப்பவார் காவல்துறை அதிகாரி வேடமிட்டவர் எல்லோரையும் ஒதுங்கச் செய்து கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார். டாக்டர் - நர்ஸ் வேடம் அணிந்தவர்கள் எல்லோருக்கும் மாத்திரைகளைக் கொடுப்பார்கள். அதனை வாங்கியவர் மருந்தாக எண்ணி உட்கொள்வார். பைத்தியக்காரர் வேடம் புனைந்தவர் தலையைச் சொறிந்து கொண்டு பெண்களால்தான் இப்படி ஆனேன் என்று புலம்பியபடி செல்வார். இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நகைச்சுவை உணர்வையே ஏற்படுத்தும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இவர்களிடம் இல்லை. முறைப்பெண்களைக் கேலி செய்வதையும் எவரும் தடுக்கவோ பொருட்படுத்தவோ மாட்டார்கள்.
சாமியாடியின் தோற்றம்
வேடமிட்ட அனைவரும் முன்னே செல்ல வேட்டைக்குச் செல்லும் சாமி கடைசியாக வரும். இவரது தோற்றம் தலைவனை நினைவுபடுத்தும் வகையிலிருக்கும். தலையில் அடியில்லாத கூடையை வைத்து வெள்ளைத் நுணியால் சுற்றி தலைப்பாகை அமைத்திருப்பர். கையில் ஈட்டிக்கம்பி இருக்கும். ஈட்டிக்கம்பின் நுனியில் பழைய பிய்ந்த முறம் மாட்டி இருக்கும் இவரை உலக்கையில் உட்கார வைத்து நால்வர் தூக்கியபடி வருவர் புலிக்குத்தும் இடம் வரை இவரை இறக்காமல் தூக்கி வருவர். இவர் நீண் வெண்தாடி மீசையுடன் பார்க்கும்போது நகைச்சுவை உணர்வு ஏற்படு வகையில் வருவார் எனினும் இவர் அருள் வந்த நிலையிலேயே இருப்பார்.
சடங்கு நிகழும் முறை
வயல் வெளிக்குச் சென்ற இவர்களை அங்கு வயலில் வைக்கோலை உடலில் சுற்றியபடி நிற்கும் பத்துப்பேர் வழிமறித்து சிலம்பாட்டம் நிகழ்த்துவர். பின் வயல்வெளிக்குச் சென்று புலியைத் தேடுவர். வயலின் ஒருபுறத்தில் உடம்பு முழுவதும் களிமண் பூசியபடி ஓடும். பின்பு பதுங்கியபடி மீண்டும் வருவர். இவ்வாறு மூன்று முறை ஒரு கும்பல் விரட்டி வருவார்கள் இக்கூட்டத்தைப் பார்த்து புலி திரும்பி வந்து வந்து திரும்பிச் செல்வர். பின்னர் அவர்கள் வரப்பில் பதுங்கியபடி அங்கு என்ன நடக்கிறது என்று கவனிப்பர். அப்போது அங்கு புலி நடமாடும். அதனை அங்கிருந்த ஒருவர் சுடுவது போல் பாவனை செய்வார். அப்போது வயல்வெளியில் ஒருவர் வேட்டு ஒன்றை வெடிக்கப் புலி சுடப்பட்டது போல கீழே விழும். சாமியாடி, அப்புலியைக் குத்துவார். இந்நிகழ்வுக்குப்பின் களிமண் பூசியவர்களுக்குப் பெண்கள் கொழுக்கட்டைகளை வாரி இறைக்கின்றனர். அதனைப் பிடித்து அவர்கள் தின்கின்றனர். பிறகு அனைவரும் ஒரே வட்டத்தில் கும்மியாட்டம் நிகழ்த்துகின்றனர். அதனைத் தொடர்ந்து சாமியை வழிபட்டக் கூட்டம் மெதுவாகக் கலைகிறது. வேடமிட்டவர்களும் வேடங்களைக் கலைக்கத் தொடங்குகின்றனர்.
புலிக்குத்து எனும் இச்சடங்கு வேட்டைச் சமூக வாழ்வையே நினைவுறுத்துகிறது. வேட்டையாடும் உத்திகளைச் சொல்கிறது. வேளாண் தொழிலின் தொடர்பை உணர்த்துகிறது. அனைவரிடையே கலகலப்பை ஏற்படுத்துவதோடு ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது புலிக்குத்து என்னும் சடங்கு தசரா விழாவைப் போன்று அமைந்திருந்தாலும் இச்சடங்கு இப்பகுதி மக்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. இச்சடங்கும் மழை வேண்டி அமைந்ததற்கு காரணமாக உள்ளது. கும்மிக்கும் மழைக்கும் உள்ள தொடர்பை இச்சடங்குகள் புலப்படுத்துகின்றன.
சடங்குகள் பற்றிய மதிப்பீடு
இச்சடங்குகள் எப்போது தொடங்கியது என்பதை வரலாற்று அடிப்படையில் கூற முடியாது. இருப்பினும் ஒவ்வொரு குழுவாக ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கிய மனிதன் இயற்கையை வெற்றி கொள்வதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் எச்சங்கள் எனக் கூறமுடியும் (ஜோதிராணி, கே.ஏ. 2004:33).
இயற்கையோடு போராடி வரும் மனிதஇனம் தன் வாழ்வைச் செம்மையாகவும் துன்பமின்றியும் வாழ எடுத்துக் கொண்ட முயற்சிகளின் எச்சமே சடங்குகள் என்று நம்பப்படுகிறது. போர்க்குணம் உள்ள மனிதன். எதிர்த்துப் போராடும் குணம் பெற்றதாலேதான் இவனுக்கு மனிதன் என்ற பெயர் கிடைத்தது. இல்லையெனில் விலங்கினங்களோடு விலங்கினமாக காடுகளிலே இருந்திருக்க வேண்டும்.
வழிபாட்டு நிகழ்வில் நிகழ்த்தப்படும் சடங்கு முறைகளுக்கும் வாழ்வியல் கூறுகளுக்கும் தொடர்பு இருப்பதனையும் உணர முடிகிறது. இந்நிலை சிறுதெய்வ வழிபாட்டில் எஞ்சியிருப்பதை இன்றளவும் காணமுடிகிறது. தெய்வவழிபாடு இயற்கை மனிதன் இரண்டிற்குமுள்ள உறவை உள்ளடக்கி இருந்து வருகிறது. வழிபாட்டு முறையில் பல்வேறு நிறுவனச் சமயங்களின் தாக்கத்தால் மாற்றங்கள் இருந்தாலும் வழிபடும் தெய்வத்திற்கும் மனிதனுக்குமான உறவுநிலை எச்சங்களாக வழிபாட்டுச் சடங்குகளில் இன்றும் நிலைத்து நிற்கிற போக்கைக் காணமுடிகிறது (முனியசாமி.மு, 4. 2010:286).
சமூக மாற்றங்களின் விளைவாக இச்சடங்குகளின் செய்முறைகளில் மாற்றம் ஏற்படவே செய்யும். இச்சடங்கின் தேவை முற்றிலும் மறையும் போது சடங்கும் மறைந்து போகும். அறிவியலால் மழையைப் பெய்விக்கமுடியும் என்ற நிலை உருவாகும் போது மழை தொடர்பான நாட்டுப்புறச்சடங்கின் தேவை மறைந்து போகும் (முத்தையா, இ. 2010:147).
இன்று கிராமங்கள் தோறும் செய்யப்பட்டு வந்த மழைக்கஞ்சி இமுத்தையாவின் கூற்று தகுந்த ஆதாரமாக விளங்குகிறது. அறிவியல் எடுத்தல் என்னும் சடங்கு அடியோடு மறைந்துவிட்டது. இதற்கு வளர்ச்சி, வேலைப்பளு, நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இச்சடங்குகளை மேற்கொள்வதில்லை எனத் தெரிகிறது. சமுதாய ஒற்றுமையின்மை, சுயநலப்போக்கு ஆகியன அடிப்படைக் காரணங் என்பதற்கு மழைக்கஞ்சி எடுக்கும் சடங்கு நல்ல எடுத்துக்காட்டு. களாக உள்ளன. அறிவியல் வளர்ச்சியால் சடங்குகள் மறைந்துபோகும்
ஆய்வு முடிவுகள்
1. சடங்குகள் புனிதம் சார்ந்து அமையும் செயல்களின் தொகுப்பு. பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் செய்யப்படும் செயல் சடங்கு எனப்படுகிறது.
2. சடங்குகள் புனிதம், ஆரம்பம், தீட்டு நீக்குதல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன.
3. சமூக ஒழுங்கினை நிலைநிறுத்துவதைக் கட்டமைப்பாகக் கொண்டுள்ளன.
4. சடங்குகள் இருநிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. சமயச்சடங்குகள், சமுதாயச் சடங்குகள் என்ற நிலைகளில் செய்யப்பட்டு வருகின்றன.
5. பாரிவேட்டை, புலிக்குத்து, கப்பரை எடுத்தல், தெய்வத்தை வரவேற்றல், வேட்டையாடுதல், பலியிடுதல், பங்கு செய்தல் போன்றவை சமயச்சடங்குகள் எனும் நிலையில் அடங்குகின்றன.
6. அறிவியல் வளர்ச்சி, பகுத்தறியும் தன்மை இவை வளரும் நிலையில் சடங்குகளின் தேவை இல்லாமல் போகும்; சடங்குகளும் மறைந்துவிடும.
7. சடங்குகள் தொன்மைக்கால மனித வாழ்வியலின் எச்சங்களாக உள்ளன. ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றன. பாகுபாடுகள் சில இருந்த போதிலும் சடங்குகள் அனைவருக்கும் பங்கேற்கும் உரிமையைக் கொடுக்கின்றன. தெய்வ நம்பிக்கை, நல்வாழ்வு ஆகியன வேண்டிச் செய்யப்பட்டு வரும் சடங்குகளைத் தமிழர் பண்பாட்டிலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. தமிழரின் தொன்மை, பண்பாடு இவற்றை அறிய உதவும் நிலைக்கலன்களாக இச்சடங்குகள் விளங்குகின்றன. வேட்டைச் சமூகம் உணவு பங்கிடும் மேலாண்மை, ஒற்றுமை உணர்வு, போராடும் குணம் போன்றவைகளை இச்சடங்குகள் உணர்த்துகின்றன.
துணைநூல் பட்டியல்
அப்பாட் ஜெ, இந்திய சடங்குகளும் நம்பிக்கைகளும், முதல் தொகுதி, சந்தியா பதிப்பகம் சென்னை,2011
குணசேகரன் கே ஏ, நாட்டுப்புற மண்ணும் மக்களும், நியூ சென்சுரி புக் ஹவுஸ் சென்னை.1988
சந்திரசேகரன், இரா. நாட்டுப்புற வழிபாட்டு மரபுகள், மகாகவி பாரதியார் நூலகம் கோவை 2002
பெருமாள்,அ.கா. சனங்களின் சாமிகளின் கதை, யுனைடெட் ரைடர்ஸ் சென்னை 2005
முத்தையா, இ தமிழர் பண்பாட்டு விழியில் நிகழ்த்து கலைகளும் உலகநோக்கும் காவியா பதிப்பகம், சென்னை 2010
முத்தையா,இ அடித்தள மக்களின் குறியீட்டு பயண வழிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை 2010
முத்தையா.ஓ, சந்தனம் பாட்டு தன்னானே ,சென்னை, 2004
முனியசாமி.மு, பண்பாட்டு தகவலியமும் கருத்து பரிமாற்றமும் (ஆய்வுக்கட்டுரை),பண்பாட்டுத் தகவல்களின் அரசியல், நாட்டார் வழக்காற்றிகள் துறை பாளையங்கோட்டை ,2010.
ஜோதி ராணி க.அ, சடங்கு பாடல்கள், பல்கலை வெளியீடு ,சென்னை 1996 .
ஜோதிராணி க.அ, தமிழர் பண்பாட்டு தளத்தில் சடங்குகள், தன்னைநானே பதிப்பகம், சென்னை, 2004
தகவலாளர்கள்
1. மு இருளாயி, 65, அகரம் காலனி, திருபுவனம், சிவகங்கை மாவட்டம்,
21 .4.2010
2.ஆ.லட்சுமி, 58, அகரம் காலனி, திருபுவனம், சிவகங்கை மாவட்டம், 21.4.2010
3.ரா.லட்சுமி, 53, அகரம் காலனி, திருபுவனம், சிவகங்கை மாவட்டம்,
21.4.2010.
=======================================================
https://koodalilakkiyamedai.blogspot.com/2025/09/blog-post_19.html
ReplyDelete